செவிலியர்களின் சமவேலைக்கு சமஊதிய போராட்டம்

0
401

தமிழ்நாடு எம் ஆர் பி செவிலியர்களின் சமவேலைக்கு சம ஊதியம் கோரிக்கை கடந்து வந்த பாதை – ஒரு பார்வை.

சமவேலைக்கு சமஊதியம்

  சம வேலைக்கு சமஊதியம் என்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தால் இந்திய மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமை ஆகும். இதன்படி அரசின் கீழ் பணிபுரியும் நிரந்தர ஊழியர்கள், தற்கால ஊழியர்கள், தொகுப்பூதிய பணியாளர்கள் ஆண் பெண் என்ற எந்த வேறுபாடும் இன்றி  அனைவரும் ஒரே பணியை(சம வேலையை) செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் (சம ஊதியம்) வழங்க வேண்டும் என்று அரசியல் அமைப்பு சட்டம் கூறுகிறது.

தனியார் செவிலியர் பள்ளியில் படித்த மாணவ மாணவியருக்கும் அரசுபணி

 தமிழகத்தில் பல ஆண்டுகளாக அரசு செவிலிய பள்ளியில் படித்தவர்ஙளுக்கே அரசு பணி வழங்கப்பட்டு வந்தது. இதனை எதிர்த்து தனியார் செவிலியர் பள்ளியில் படித்த சிலர் வழக்கு தொடர்ந்தனர். மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தனியார் பள்ளியில் படித்த செவிலியர்களுக்கும் அரசு பணி வழங்கவேண்டும் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை 2015 ஆம் ஆண்டு வழங்கினார்கள்.

தொகுப்பூதிய அடிப்படையில் செவிலியர் பணியிடங்கள்.

 உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து தமிழக அரசானது  ரூபாய் 7700/- மாத ஊதியத்தில் 7243 செவிலியர்களை மருத்துவ  தேர்வாணையத்தின்மூலம் நடத்தப்பட்ட  தேர்வின் மூலம் தேர்வு செய்து பணியில் அமர்த்தியது.அதன்பிறகு சுமார் 3000 செவிலியர்களை இதே முறையில் பணி அமர்த்தியது. பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் இரண்டு வருடம் அல்லது நிரந்தர பணியிடங்கள் உருவாகும் போது நிரந்தரம் செய்யபடுவார்கள் என்று கூறப்பட்டது

ஊதியபற்றாக்குறை

  இரண்டு வருடம் முடியும் தருவாயில் இருந்த செவிலியர்கள் அனைவரும் தங்கள் ஊதிய பற்றாக்குறையை உணர ஆரம்பித்திருந்தனர்.மேலும் மாதத்திற்கு நான்கு வாரவிடுமுறையும் ஒரு தற்செயல் விடுப்பு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. உடல் நிலை சரி இல்லை என்று விடுப்பு எடுத்தாலோ மகப்பேறு விடுப்பு எடுத்தாலோ அச்செவிலியர்களுக்கு ஊதியம் வழங்கப்படமாட்டாது. மேலும் இதேபோல் பல இன்னல்களுடன் அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களும் தங்கள் பல மனக்குமுறல்களுடன் தங்கள் பணியை செவ்வனே செய்து வந்தனர்.

 பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் (ஒரு செவிலியர் உடல்நிலை சரிஇல்லாமல் பணிக்கு வரமுடியாத சூழல் ஏற்பட்டால் ஆள்பற்றாகுறையால் பணியில் இருக்கும் செவிலியரே அவர் பணியை தொடர்தல், இன்னும் பல) செவிலியர்கள் தங்கள் பணியை செய்த நிலையில்  நிரந்தர செவிலியர்களும் தொகுப்பூதிய செவிலியர்களும் ஒரே பணியை செய்த போதிலும் நிரந்தர செவிலியர்களுக்கு ஒரு ஊதியம் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஒரு ஊதியம் என்ற குமுறல் தான் மேலோங்கி இருந்தது. மேலும் தங்களுக்கு  வழங்கப்பட்டு வந்த குறைந்த ஊதியமான 7700/- ரூபாயால் சமுதாயத்திலும் உடன் பணிபுரியும் ஊழியர்களாலும் தாழ்வு மனப்பாண்மையுடன் நடத்தபடுவதாக சிலர் எண்ணினர். மேலும் சிலர் மருத்துவமனையில் கடைநிலை ஊழியர்களின் ஊதியத்தை விடவும் தாங்கள் குறைவான ஊதியம் பெறுவதாக எண்ணி தாழ்ச்சியுற்றனர்.

சங்கம் உருவாகுதல்

 இந்த நிலையில் தான் அனைத்து செவிலியர்களும் சிறுக சிறுக ஒன்றிணைய ஆரம்பித்தனர். எம்ஆர்பி செவிலியர்களுக்கு தனியாக சங்கம் வேண்டும் என்று அனைவரும் எண்ண ஆரம்பித்திருந்தனர். அனைத்து செவிலியர்களும் சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை முன் வைத்தனர். இந்த நிலையில் சங்கம் உருவாக்க வேண்டும் என்ற முனைப்பில் இணைந்திருந்த பல செவிலியர்கள் தங்களுக்குள் ஏற்பட்டிருந்த கொள்கை முரன்பாட்டினால் இரு அணிகளாக பிரிந்து ,முறையே எம் ஆர் பி செவிலியர்கள் நல சங்கம் மற்றும் எம் ஆர் பி செவிலியர்கள் மேம்பாட்டுசங்கம் உருவாயிற்று.  இரு சங்கங்களும் கொள்கையில் வேறுபட்டிருந்தாலும் கொண்ட கோரிக்கையான சமவேலைக்கு சமஊதியத்தில் ஒற்றுமையாய் இருந்தனர்.

 எம் ஆர் பி செவிலியர் நலசங்கத்தை சார்ந்தவர்கள்  டிஎம்எஸ், சுகாதாரதுறை செயலர், சுகாதாரதுறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் என அனைவரையும் தனித்தனியே சந்தித்து தங்களது கோரிக்கையான சமவேலைக்கு சம ஊதியத்தை நிறைவேற்றித் தரும்படி முறையிட்டனர். எம் ஆர் பி செவிலியர் மேம்பாட்டுசங்கத்தை சார்ந்தவர்கள் வழக்கு தொடுத்திருந்தனர். இரு செவிலிய சங்கங்களும் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற அடுத்தகட்ட நகர்வை நோக்கி நகர ஆரம்பித்திருந்தனர்.

உள்ளிருப்பு போராட்டம்

செவிலியர்களின் சமவேலைக்கு சமஊதிய போராட்டம்
16.11.2017

 தங்களது நீண்ட நாள் கோரிக்கையான சமவேலைக்கு சமஊதிய கோரிக்கை நிறைவேராத விரக்தியில் இருந்த செவிலியர்கள் மனதில் போராட்டம் செய்து கோரிக்கையை  நிறைவேற்றிக் கொள்வது என்ற எண்ணம் தோன்றியிருந்தது. இரு சங்கத்தை சார்ந்தவர்களும் போராடி தங்கள் கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வது என தனித்தனியாக தங்களுக்குள் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினர்.தங்களது கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் நலசங்கத்தை சார்ந்தவர்கள் 16.11.17 அன்றும் மேம்பாட்டு சங்கத்தை சார்ந்தவர்கள் 27.11.2017 அன்றும் டி எம் எஸ் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் செய்யப்போவதாக தங்கள் உயர் அதிகாரிகளுக்கு முறைபடி அறிவித்திருந்தனர்.

 கோரிக்கையைப்பற்றி பரிசீலிக்க எந்த அழைப்பும் வாராத நிலையில் நலசங்கத்தை சார்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட செவிலியர்கள் டி எம் எஸ் வளாகத்தில் குழுமினார்கள். தங்களது கோரிக்கையை நிறைவேற்றித்தரும்படி அனைவரும் ஒருமித்து முழங்கினர். செவிலியர்களின் கோரிக்கை முழக்கங்களால் வளாகம் மூழ்கியது.  சில மணி நேரத்திற்க்கு பிறகு உயர் அதிகாரிகளிடம் இருந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வந்தது. மூன்று கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு செவிலியர்களின் பல கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனால் நலசங்கத்தை சார்ந்தவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர். 

READ MORE  Useful Notes For Nursing Competitive Exams

 அதிகாரிகள் நிறைவேற்றி தருவதாக சொன்ன கோரிக்கைகளுள் சில

 • ஊதியத்தை பல மடங்கு உயர்த்தி தருதல்,
 • மகபேறு விடுப்பு வழங்குதல்,
 •  மருத்துவ விடுப்பு வழங்குதல்,
 • படிப்படியாக விரைவில் அனைவரையும் நிரந்தரம் செய்தல்.

             இதனால் போராட்டத்திற்க்கு வந்த பல செவிலியர்கள் மகிழ்ச்சியுற்றனர், பல செவிலியர்கள் தங்கள் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை நிரைவேரவில்லையே என்ற ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

 இந்த நிலையில் 16.11.2017 அன்று நடந்த போராட்டத்தின் முடிவில் நிறைவேற்றி தருவதாக சொன்ன கோரிக்கையில் மகிழ்ச்சியுறாத மேம்பாட்டுச்சங்கத்தை சார்ந்த செவிலியர்கள்  27.11.2017 அன்று முதல்சமவேலைக்கு சம ஊதியம் கோரிக்கை நிறைவேறும் வரை போராட போவதாக உறுதியாக இருந்தனர்.

பெரும் செவிலியர்படை

EQUAL WAGE PROTEST
27.11.2017

27.11.2017 அன்று காலை ஆறு மணி முதல் செவிலியர்கள் கூட்டம் கூட்டமாக டி எம் எஸ் வளாகத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தனர். டி எம் எஸ் வளாகத்திற்க்கு உள்ளே செல்ல செவிலியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் டி எம் எஸ் வளாகம் முன்பாக உள்ள சாலையில் போக்குவத்து நெரிசல் ஏற்பட ஆரம்பித்திருந்தது. இதனால் செய்வதறியாது திகைத்த காவலர்கள் செவிலியர்கள் அனைவரையும் வேறு வழியின்றி உள்ளே அனுமதித்தனர்.ஆரம்பத்தில் சுமார் இரண்டாயிரம் செவிலியர்கள் என்றிருந்த நிலை நேரம் செல்லச்செல்ல சுமார் ஐந்தாயிரம் செவிலியர்கள் வந்து சேர்ந்திருந்தனர். செவிலியர்களின் ஒற்றை கோரிக்கை முழக்கமான சம வேலைக்கு சம ஊதிய முழக்கம் டி எம் எஸ் வளாகம் முழுவதும் ஒலிக்க ஆரம்பித்திருந்தது.  நேரம் செல்ல செல்ல முழக்கம் அதிகமானதே தவிர குறைந்தபாடில்லை, இதனை அறிந்த அதிகாரிகள் உடனே பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகும் தங்களது கோரிக்கை நிறைவேறாததால் இரண்டாம் நாளும் போராட்டம் தொடர்ந்தது. இரண்டாம் நாள் தொடக்கத்தில் எம் ஆர் பி செவிலியர் நலசங்கத்தை சார்ந்தவர்களும் போராட்டத்திற்க்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் தங்களை இணைத்து கொண்டனர். இரண்டாம் நாள் முடிவில் சுகாதாரதுறை அமைச்சர் அவர்களிடம் இருந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வந்தது.  பேச்சுவார்த்தை முடிவில் 90% கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கப்பட்டதன் அடிப்படையில் போராட்டம் சங்க தலைவர்களால் வாபஸ் பெறபட்டதாக அறிவிக்கப்பட்டது. மீண்டும் சம வேலைக்கு சம ஊதிய கோரிக்கை கிடப்பில் போடப்பட்டது.  கோரிக்கை நிரைவேறாமல் வாபஸ் பெற்றதால் மகிழ்ச்சியுறாத செவிலியர்கள் போராட்ட களத்தில் இருந்து கலைந்து செல்ல மறுத்து மூன்றாம் நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர்.

செவிலியர்களின் சமவேலைக்கு சமஊதிய போராட்டம்
30.11.2017

மூன்றாம் நாள் தொடக்கத்தில் இருந்தே பல அரசியல் கட்சியை சார்ந்த பல தலைவர்கள் போராட்டகளத்திற்க்கு நேரில் வந்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். இந்நிலையில் பொது மக்கள் மேல் மிகுந்த அக்கறை கொண்ட ஒரு நபர்  செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டம் செய்வதால் பொதுமக்கள் சிரமத்திற்க்கு ஆளாகின்றனர் என்று போராட்டத்திற்க்கு தடை வழங்க கோரி பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

NAAM THAMILAR LEADER MR.SEEMAN ON EQUAL WAGE PROTEST
30.11.17

  பொதுநல வழக்கை விசாரித்த மாண்புமிகு நீதிபதி அவர்கள் செவிலியர்கள் போராட்டம் செய்வதால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர் என்று கூறி போராட்டத்திற்க்கு தடைவிதித்தார் மேலும் செவிலியர்களுக்கு வழங்கும் ஊதியம் வாழ்வாதாரத்திற்க்கு போதுமானது இல்லை என்று கூறி ஊதியத்தை உயர்த்தி வழங்க அறிவுறித்தினார். இந்த தீர்ப்பை ஏற்று அனைத்து செவிலியர்களும் அடுத்த நாளே பணிக்கு திரும்பினர். இந்த வழக்கின் முடிவில் அரசானது செவிலிர்களுக்கு ஊதியம் 7700/- லிருந்து 14000/- ஆக  உயர்த்தி வழங்கியது. மேலும் நீதிபதி அவர்கள் தொகுப்பூதிய செவிலியர்கள் நிரந்தர செவிலியர்கள் செய்யும் பணியைத்தான் செய்கிறார்கள் என்று அரசு அமைக்கும்  குழுவிடம் நிரூபிக்க வேண்டும், அவ்வாறு நிரூபிக்கும் பட்சத்தில் அரசு, தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் நிரந்தர செவிலியர்களுக்கு நிகரான ஊதியத்தை வழங்கவேண்டும் என்ற மகத்தான தீர்ப்பை வழங்கினார்கள்.

NURSES ON EQUAL WAGE PROTEST
30.11.2017

 இந்த மூன்று நாள் போராட்டத்தின் போது செவிலியர்கள் எண்ணிலடங்கா துன்பத்திற்கு ஆளானார்கள். பல சொல்லமுடியா இன்னல்களை அனுபவித்தனர்.

மூன்றாம் அணி

போராட்டம் முடிவடைந்த நிலையில் இரு சங்க கொள்கைக்கு ஒத்துவராத செவிலியர்கள் மூன்றாவதாக ஒருங்கிணைந்த எம் ஆர் பி செவிலியர் சங்கம் என்ற சங்கத்தை ஆரம்பித்தனர்.

மூன்று சங்கத்துக்கும் பாதை வேறாக இருந்தாலும் பயணிக்கும் இடம் ஒன்றாகவே இருந்தது.

Core committee அழைப்பு

 மூன்று சங்க நிர்வாகிகளையும் மைய குழுவானது (core committee) சம வேலைக்கு சம ஊதியம் பற்றி விவாதிக்க அழைப்பு விடுத்திருந்தது. மூன்று சங்க நிர்வாகிகளும் விவாதத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களையும் வாதங்களையும் சிறப்பாக எடுத்துறைத்ததாக அச்சங்கங்களின் சார்பில் கூறப்பட்டது.

ஆவணங்கள் சமர்ப்பித்தல்

NURSES PROTEST
file copy

 உயர் நீதி மன்ற தீர்ப்பின் படி சுமார் ஐந்தாயிரத்திற்க்கு மேற்பட்ட செவிலியர்கள் நிரந்தர செவிலியர்கள் செய்யும் பணியைத்தான் தொகுப்பூதிய செவிலியர்களும் செய்கிறோம் என்று ஆறு மாதங்களுக்குள் (ஜீலை 2018முதல் டிசம்பர் 2018 வரை) அரசு அமைத்த குழுவிடம் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர்.

ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு இரண்டு மாதங்களாகியும் சமவேலை சமஊதியம் குறித்த எந்தவித தகவலும் இல்லாத காரணத்தால் மேம்பாட்டு சங்கத்தினர் பிப்ரவரி மாதம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் கண்டன ஆர்பாட்டங்கள் நடத்தினார்கள். கடைசியாக வந்த தகவல் படி சமவேலைக்கு சம ஊதியம் வழங்காத காரணத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருப்பதாக எம் ஆர் பி செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எம் ஆர் பி செவிலியர் நல சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த எம் ஆர் பி செவிலியர் சங்கத்தினர் அவ்வப்போது உயர் அதிகாரிகளை சந்தித்து தங்களது கோரிக்கையை நிறைவேற்றி தரும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்

 இவ்வாறு செவிலியர்களின் நலனில் அக்கறை கொண்டு தொடர்ந்து செயல்பட்டு வரும் மூன்று செவிலியர் சங்கத்தினரின் நல்ல எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்

                     நன்றி

SHARE HERE
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here